உங்களில் யார் அடுத்த ஜெகத் கஸ்பர்?

இந்தக் கட்டுரைக்கு இப்படி ஒரு தலைப்பு மிகப் பொருத்தமானது என்றே கருதுகிறேன். ஏனென்றால் அதிகாரத்தை நேரடியாக சுவைப்பவர்கள் ஒரு பக்கமும், அதிகார வர்க்கத்தின் ஒட்டுண்ணிகளாக மாறி அதிகாரத்தை சுவைக்கத் துடிப்பவர்கள் ஒரு பக்கமுமான காலத்தில் நாம் வாழ்கிறோம். எழுத்திலும், படைப்பிலும் அறச் சீற்றத்தை வெளிப்படுத்தும் அறிவுஜீவிகள் பலபேர் தங்களை அதிகாரங்களுடன் பொருத்திக்கொள்வதில் கூடுதல் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அப்படியான வாய்ப்புகளை அவர்கள் ஒரு போதும் தவறவிடுவதில்லை அல்லது வாய்ப்புகளை வலிந்து உருவாக்கிக் கொள்கிறார்கள். அதற்கு வரும் எந்த விமர்சங்களையும் அவர்கள் பொருட்படுத்துவது இல்லை அல்லது சந்தர்ப்பவாதமாக பதில் சொல்லி கடந்து போகிறார்கள். இந்த ஒட்டுண்ணி அரசியலின் முற்றிய வடிவம்தான் பாதிரி ஜெகத் கஸ்பர்.

இவர் ஒன்றும் எழுத்தாளரோ, அறிவுஜீவியோ அல்ல. ஆனால் தமிழக ஊடகங்களிலும் அரசியல் தளத்திலும் தொடர்ந்து தன்னை ஒரு லாபி மேக்கராக நிலைநிறுத்த முயல்பவர். அதற்காக ஆளும் சக்திகளுடன் எப்போதும் நல்லுறவைப் பேணுபவர். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் பேரழிவான ஈழ யுத்தத்தையும் தன் சுய நலன்களுக்காக மடைமாற்றிவிட்ட இந்த பாதிரியின் டவுசர் இப்போது கிழிந்து தொங்குகிறது. அருகிலேயே அடுத்த கஸ்பரும் கண்ணடித்துக்கொண்டு நிற்கிறார்.

ஆளும் வர்க்க நலன்களுக்காக மக்களின் அரசியலை மழுங்கடிக்கும் தன்னார்வ குழுக்களின் வேலைத் திட்டம்தான் இவர்களின் நிகழ்ச்சி நிரல். அவற்றை இந்தியாவுக்குள் நிறைவேற்றித் தரும் முகவர்கள்தான் இந்த கஸ்பர் வகையறாக்கள். ஈழத்தில் மாபெரும் மனிதப் பேரழிவு நடந்து முடிந்ததும் அதைப்பற்றி மறக்க முடியாத வேதனையில் நக்கீரனில் தொடர் எழுதும் இந்த பாதிரி, கொடூரமான முறையில் போர் நடந்துகொண்டிருந்தபோது என்ன செய்தார்? மக்கள் மனங்களில் எழுந்திருந்த அரச எதிர்ப்புணர்வை மட்டுப்படுத்தும் தந்திரங்களைக் கையாண்டார். ‘யாரையும் பகைத்துக்கொள்ளக் கூடாது. நாம் பகையுணர்வை அதிகப்படுத்துவதன் மூலம் அரை ஆதரவாளனாக இருப்பவனை முழு எதிர்ப்பாளனாக மாற்றிவிடுகிறோம்’ என்று பிரசங்கம் செய்தார். ‘தாழாது, தாழாது... தமிழினம் தாழாது’, ‘தாழ்த்தாது தாழ்த்தாது, தமிழினம் யாரையும் தாழ்த்தாது’ என்று கருணாநிதி தயாரித்துக் கொடுத்த கழிவிரக்க வசனங்களைப்போல ‘யார் மனதும் புண்படாமல் போராடுவது எப்படி?’ என்று வகுப்பு எடுத்தார். அதற்காக இந்த பாதிரி தேர்ந்தெடுத்த போராட்ட வடிவம் ‘மௌன ஊர்வலம்’. ஈழப் போரை நடத்திய இந்தியாவுக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் குரல் கொடுத்தபோதுதான் கஸ்பர் மௌன ஊர்வலம் நடத்தினார்.



ஜனவரி தொடங்கி அடுத்து வந்த மாதங்களில் கருத்துரிமை மீது தமிழ்நாட்டில் மிக மோசமான அடக்குமுறை நிலவியது. ஈழ ஆதரவு போராட்டங்களுக்கு காவல்துறையால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஈழம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தவோ, கூட்டம் நடத்தவோ அரங்குகள் மறுக்கப்பட்டன. அனைவரும் மிரட்டப்பட்டிருந்தனர். துண்டு பிரசுரங்கள் அச்சடித்துத் தரக்கூடாது என்று அச்சகங்களுக்கு வாய்மொழி மிரட்டல் விடப்பட்டிருந்தது. (இந்த காரணத்தினாலேயே திண்டிவனத்துக்குச் சென்று துண்டு பிரசுரம் அச்சிட்டு வந்த தோழர்களை நான் அறிவேன்). ஆனால் ஜெகத் கஸ்பரின் மௌன ஊர்வலத்துக்கு எந்த தடையும், எந்த கட்டுப்பாடும் இல்லை. தீவுத் திடல் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்ற ஊர்வலத்துக்கு போலீஸ் பாதுகாப்பும் தரப்பட்டது. காரணம் மிக எளிதானது. மற்றவர்களின் போராட்டங்கள் அரசுக்கு எதிரானவை. கஸ்பரின் போராட்டங்கள் அரசுக்கு எதிரானவை அல்ல. அவர் எதிர்ப்பை நிறுவனமயப்படுத்தி அரசின் காலடியில் சமர்ப்பித்தார். இந்த இடத்தில்தான் அரசுக்கு கஸ்பர்கள் தேவைப்படுகின்றனர்.

அந்த மௌன ஊர்வலத்திலும், கஸ்பரின் இன்னபிற கூட்டங்களிலும் அவரது ஆதரவாளர்களாக இருந்தவர்களில் அதிகபட்சம் பேர் ஐ.டி. இளைஞர்கள்தான். மாநிலம் முழுவதும் ஒருவித கொந்தளிப்பான சூழல் நிலவிய அக்காலக் கட்டத்தில் ஐ.டி. இளைஞர்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள். கேட்டுக் கேள்வியில்லாமல் திடீர் திடீரென வேலையை விட்டுத் தூக்கப்படும் தங்களின் சொந்த பிரச்னைக்காகக் கூட போராட வீதிக்கு வராத அவர்கள், ஈழத்தில் நடந்த மக்கள் படுகொலைகளைப் பொறுக்க முடியாமல் முதல் முறையாகப் போராடத் துணிந்தார்கள். ஆனால் அவர்களது அரசியல் குறைபாடு காரணமாக போராட்டத்தின் வடிவங்களும், தன்மையும் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இதனாலேயே அவர்கள் நடத்திய சில போராட்டங்களில் கஸ்பரை காண முடிந்தது. கஸ்பர் நடத்திய மௌன ஊர்வலத்துக்கு ஐ.டி. இளைஞர்கள் போனார்கள். ‘துப்பாக்கிகளுக்கு இதயமில்லை - உங்களுக்கு’ என்பது மாதிரியான அரசியலற்ற/ மய்யப்படுத்தப்பட்ட மனிதாபிமான வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்டுகளை அணிந்தபடி அந்த மௌன ஊர்வலத்திலும், மற்ற இடங்களிலும் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

‘ஈழம்... மௌனத்தின் வலி’ என்ற தலைப்பில் நூறு பேரின் கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் கஸ்பர். அதன் அபத்தங்களையும் அங்கு பேசிய பக்கி வாசுதேவ் போன்ற பன்னாடைகளின் பேச்சு பற்றியும் ஏற்கெனவே தோழர்கள் விரிவாக இணையத்தில் எழுதியிருக்கிறார்கள்.

நூறு கவிதைகள் என்கிறார்கள். ஆனால் அதில் ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா, ஜக்கி வாசுதேவ் போன்றவர்ளும் உண்டு. இவர்கள் எப்போது கவிஞர்கள் ஆனார்கள் என்று தெரியவில்லை. ரஜினிகாந்த் மேடையில் பேசிய பேச்சை எடுத்து வெளியிட்டு அதையும் கவிதை என்கிறார்கள். அருந்ததி ராய் ‘டைம்ஸ் ஆஃப் இன்டியா’வுக்கு எழுதிய கட்டுரையின் சில வரிகளும், பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் எழுதிய கட்டுரையின் சில வரிகளும் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. அவையும் கவிதைகளாம். பலரும் பல்வேறு இடங்களில் பேசியவற்றை, எழுதியவற்றை துண்டு, துண்டாக எடுத்து வெளியிட்டுக்கொண்டு ஏதோ அவர்கள் எல்லோரும் இவர்களுக்கு ஸ்பெஷலாக எழுதிக் கொடுத்ததைப் போன்று ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றனர். தோழர் துரை.சண்முகத்தின் கவிதை தணிக்கை செய்யப்பட்டது போன்றவை தனி மோசடி.

த.செ.ஞானவேல் என்பருக்குச் சொந்தமான ‘போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு’ம், ஜெகத் கஸ்பருக்கு சொந்தமான ‘நாம்’ அமைப்பும் இணைந்துதான் இந்த புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். கஸ்பரை உரிமையாளராகக் கொண்டு செயல்படும் நல்லேர் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. முதலில் எங்கிருக்கிறது இந்த பத்திரிக்கையாளர் அமைப்பு? இதில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் யார், யார்? இலங்கையில் மிக மோசமான இன அழிப்புப் போர் நடந்துகொண்டிருந்தபோது இவர்கள் எங்கே போயிருந்தனர்? ஒரு உண்ணாவிரதம், ஒரு ஆர்ப்பாட்டம்... எதை நடத்தினீர்கள்? அப்போதிலிருந்து தினசரி இணையங்களில் வெளிவரும் கோரமான புகைப்படங்களை சேகரித்து வைத்துக்கொண்டு இப்போது அவற்றை தொகுத்து கவிதை எழுதி பணம் பார்க்க முயல்கிறீர்கள் என குற்றம் சாட்டினால் அதற்கு உங்கள் மறுப்பு என்ன? ஆனால் அதுதான் உண்மை. ஈழத்தில் மக்கள் படுகொலைகள் நடந்தபோது மௌன ஊர்வலம் நடத்தி இந்திய, தமிழக அரசுகளின் துரோகத்தை மறைக்க முயன்றதன் மூலம் அப்போதைய ஆளும் சக்திகளுக்கு விசுவாச ஊழியம் புரிந்தார் கஸ்பர். இப்போது அவரது ‘நாம்’ அமைப்பும், ஞானவேலின் ‘போருக்கு எதிரான பத்திரிகையாளர் மன்றமும்’ தமிழ் மக்களின் பேரழிவையும், தோல்வியையும் அதிகார பீடங்களுடன் நெருங்குவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கின்றனர்.

போருக்குப் பிறகான இலங்கை விவசாயத்தை மேம்படுத்துவது பற்றிய பேச்சுவார்த்தையின்போது ‘ஒவ்வொரு பேரழிவிலும் ஒரு வாய்ப்பு இருக்கிறது’ என்று சொன்னார் எம்.எஸ்.சுவாமிநாதன். தன்னார்வக் குழுக்கள் எப்போதுமே பேரழிவை வாய்ப்பாகத்தான் பயன்படுத்தும் என்பதை சுனாமி நிதி மோசடிகளில் கண்டோம். அமெரிக்க கிறிஸ்தவ நிறுவனம் சுனாமி நிவாரணத்துக்காக தென்னிந்திய திருச்சபைக்கு வழங்கிய 18 கோடி ரூபாயை அவர்கள் ஆட்டையைப் போட, இப்போது அமெரிக்க நிறுவனம் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இதைப்போலவேதான் இலங்கையில் நடந்திருக்கும் மனிதப் பேரழிவையும் இவர்கள் வாய்ப்பாக பார்க்கின்றனர். புலம்பெயர் தமிழர்களை வைத்து புராஜக்ட் போட்டுப் பணம் பார்க்கும் நோக்கம் இதற்குப் பின்னால் இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுவதற்கான எல்லா முகாந்திரங்களும் இருக்கின்றன. ஆம், ஒவ்வொரு பேரழிவிலும் சுவாமிநாதன்களுக்கும், கஸ்பர்களுக்கும், ஞானவேல்களுக்கும் வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன.



தமிழ் ஊடகங்களில் இந்த கஸ்பர் எப்படி அறிமுகமானார்? கனிமொழியுடன் இணைந்து ‘கருத்து’ என்ற அமைப்பை ஏற்படுத்தியபோது இவர் மீது ஊடகங்களின் கவனம் பதிந்தது. அடுத்தடுத்த வருடங்களில் உலகளாவிய மேட்டுக்குடி கலாச்சாரமான ‘மாரத்தான்’ என்பதை சென்னைக்கு அறிமுகப்படுத்தினார். பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளிடம் பணம் பெற்று நடத்தப்படும் இந்த மாரத்தான் போட்டியானது, முழுக்க, முழுக்க முதலாளிகளின் விளம்பர சந்தை. நிறுவனத்தின் விளம்பரத் தட்டிகளைப் பிடித்தபடி அதன் ஊழியர்கள் வரிசையாக வந்துகொண்டிருக்க, இந்த பாதிரி மேடையில் நின்று நிறுவனங்களின் பெயர்களை ஒலிபெருக்கியில் ஜெபம் செய்வதுபோல உச்சரிப்பார். இந்த கொழுப்பெடுத்த நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு வருடமும் கடற்கரை சாலை ஒதுக்கித் தரப்படுகிறது.

கடந்த 2008 ஆகஸ்ட் மாதம் கஸ்பர் நடத்திய மாரத்தான் போட்டியில் வேறொரு கொடுமையும் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓரம்பள்ளி என்ற பின் தங்கிய ஒரு கிராமத்தில் இருந்து படித்து முன்னேறி வந்த சந்தோஷ் என்ற மாணவர் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு எம்.எஸ்.சி. படித்து வந்தார். கஸ்பர் கோஷ்டி, ‘மாரத்தானில் வெற்றி பெற்றால் லட்சம், லட்சமாகக் கொட்டும்’ என்று கிளப்பிவிட்ட ஆசையால், தான் வெற்றிபெற்றால் தனது ஏழ்மையான குடும்பத்துக்கு விடிவு கிடைக்குமே என்றெண்ணி மாங்கு, மாங்கென ஓடினார் சந்தோஷ். ஆனால் இறுதியில் அவர் மூச்சிரைத்து செத்துப்போனார்.

அதுபோலவேதான் இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சியும். சபாக்களுக்குப் போய் கச்சேரி கேட்பது எப்படி முன்பு பார்ப்பனர்களுக்கு அந்தி நேரத்து நேரப்போக்காக இருந்ததோ, அதுபோல மத்திய வர்க்கத்தின் பொழுதுபோக்கு மனநிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதுதான் இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சி. மாநிலம் முழுவதும் இருக்கும் நலிவடைந்த நாட்டுப்புற இசைக் கலைஞர்களை அழைத்து வந்து சென்னையின் வீதிகளில் நாடகம் போட்டார்கள். அந்த நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்த காசில் பத்தில் ஒரு பங்குக் கூட அதில் கலந்துகொண்டவர்களுக்குத் தரவில்லை. தேர்தல் சமயத்தில் சென்னை சங்கமத்தில் கலந்துகொண்ட நாட்டுப்புற கலைஞர்களை தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார கருவியாகவும் பயன்படுத்திக்கொண்டார்கள். இதற்கெல்லாம் துணை நின்றவர்தான் இந்த கஸ்பர்.

எந்த வகை அரசியல் நிலைபாடும் அற்ற, பாசிச முதலாளித்துவ முகவரான இந்த கஸ்பர் தமிழ் தேசிய சக்திகளுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். இந்த அடிப்படையிலேயே இவர் நக்கீரனில் இடம் பிடித்து எழுதிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த பாதிரிக்கு தமிழ் தேசியத்திலும் தெளிவில்லை, இந்திய தேசியத்திலும் தெளிவில்லை. அவருக்குத் தெரிந்தது எல்லாம் முதலாளித்துவ உளவு அரசியல் மட்டும்தான். இத்தகைய ஒரு நபருக்கு நக்கீரன் மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறது. நக்கீரன் கோபாலுக்கு கருணாநிதியைத் திட்டக்கூடாது, கஸ்பருக்கு ஆளும் வர்க்கத்தைப் பகைத்துக்கொள்ளக் கூடாது... இருவரும் சேர்ந்துகொள்ள இதுவே போதுமானது. ஈழம் என்பது இன்று விற்கக்கூடிய பண்டமாகவும், பிரபாகரன் என்பவர் விற்பனைக்கான பிராண்டாகவும் இருப்பதால் நக்கீரன் இத்தகைய அபத்தங்களை தொடர்ந்து வெளியிட்டும், ஆதரித்தும் வருகிறது. எந்தவித போர்ச்சூழலும் இல்லாத தமிழ்நாட்டிலும், புலம் பெயர் நாடுகளிலும் மிகவும் பாதுகாப்பாக இருந்துகொண்டு அடுத்தக்கட்ட போர் பற்றி பேசுவதும், அந்த மக்களை போராடச் சொல்வதும் அயோக்கியத்தனமானது. பிரபாகரனின் உடலை ‘மம்மி’யாக்கி, அதை வைத்து பணம் பார்க்கும் இந்த பிழைப்புவாதத்தின் நாற்றம் சகிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது. இதன்மூலம் அங்கு முகாம்களில் வாழும் மக்களின் வாழ்வு மேலும், மேலும் மோசமாக்கப்படுகிறது.

கஸ்பர் வகையறாக்களின் பட்டியலில் முன் வரிசையில் நிற்பவராகவும், அடுத்த ஜெகத் கஸ்பராவதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளவராகவும் ஞானவேலைக் குறிப்பிடலாம். தனது பத்திரிக்கை அனுபவங்களின் மூலமாக நடிகர் சூர்யா, பிரகாஷ்ராஜ் போன்ற அதிகார மட்டங்களோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஞானவேல், ‘வாழை’ என்ற பெயரிலான‌ தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் இயங்கியவர், தற்போது அகரம் பவுண்டேஷனுக்காக உழைத்து வருகிறார்.. ஞானவேல் அடுத்த கஸ்பராவதற்கு இவையே போதுமானவை. ஆனால் இந்தக் கட்டுரை உள்பட தற்போதைய விமர்சனங்கள் அனைத்தையும் ஞானவேல் பாராட்டுக் கட்டுரைகளாகவும், பிரபலமாவதற்கான வாய்ப்பாகவும் எடுத்துக்கொண்டுவிட்டால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

நாட்டில் பிரபலம் அடைவதற்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. கன்னட பிரசாத்தைக் கூடதான் பலருக்குத் தெரியும். அதற்காக அவரது வழியைப் பின்பற்றிவிட முடியுமா? ஒருவேளை ஞானவேலின் நோக்கம் அடுத்த ஜெகத் கஸ்பராவதுதான் என்றால் அதற்கு எங்காவது நடிகர்களை அழைத்துச் சென்று தையல் மிஷின் வழங்குவது, நோட்டுப் புத்தகங்கள் வழங்குவது போன்றவற்றை செய்யலாம். அதை விட்டுவிட்டு ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமாக குண்டுவீசி கொல்லப்பட்டதையும், வீரம் செறிந்த தமிழ் மக்களின் போர் துயரமான முறையில் முள்ளிவாய்க்காளில் முடிவுக்கு வந்திருப்பதையும், ஒரு இனமே அகதியாகி உலக வீதிகளில் அலைந்து திரிவதையும் சுய நலனுக்குப் பயன்படுத்துவது அசிங்கமும், அயோக்கியத்தனமுமானது!

- ஆழியூரான்

நன்றி: கீற்று

சாதி... சில குறிப்புகள்!

நடிகை சுஜாதாவின் பேட்டி பல வருடங்களுக்கு முன்பு ஃப்ரென்ட்லைனில் வெளியாகியிருந்தது.

‘‘நீங்கள் வீட்டில் இருக்கும்போது என்ன உடை அணிவீர்கள்?’’ என்பது கேள்வி. அதற்கு சுஜாதா சொல்லியிருந்த பதில், ‘‘வீட்டுல இருக்கும்போது நான் பறச்சி மாதிரி ட்ரெஸ் பண்ணுவேன்’’
--------------------------------------
நடிகை சோனாவை பேட்டி எடுக்க வேண்டியிருந்தது. ‘உங்களுக்குப் பிடித்த கெட்டவார்த்தை ஒன்று சொல்லுங்க’ என்றதும் ‘‘போடா ங்கோத்தா, ங்கொம்மா, தேவடியா பையா’’ என்று அவருக்கு தெரிந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்தார். அந்த வரிசையில் அவர் சொன்ன ‘கெட்டவார்த்தை’, ‘‘பற நாயே’’
------------------------------------------
எழுத்தாளர் அழகிய பெரியவனின் சிறுகதை ஒன்று ‘நடந்த கதை’ என்ற பெயரில் குறும்படமாக வெளியாகியிருக்கிறது. இதன் வெளியீட்டு விழா சில வாரங்களுக்கு முன்பு சென்னை ஃபிலிம் சேம்பரில் நடந்தது. அதில் விருப்ப ஓய்வு வாங்கிவிட்ட முன்னால் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும், புதிய கோங்கி பத்திரிகை ஆசிரியருமான சிவகாமி ஐ.ஏ.எஸ் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், ‘‘நான் முதன் முதலில் வேலூரில் மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டேன். உடனே அதுவரைக்கும் அந்த மாவட்டத்தின் எஸ்.பி.யாக இருந்தவரை வேறு ஊருக்கு மாற்றிவிட்டு தேவர் இனத்தை சேர்ந்த புதியவர் ஒருவரை எஸ்.பி.யாக நியமித்தார்கள். ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்? கலெக்டர், எஸ்.பி., இருவருமே புதியவர்களாக இருந்தால் மாவட்ட நிர்வாகத்தில் சிரமம் வரும்’ என்று மேலிடத்தில் கேட்டபோது அவர்கள், ‘ஏற்கெனவே அங்கு இருந்த எஸ்.பி. ஒரு தலித். நீங்களும் தலித். ஒரு மாவட்டத்தில் கலெக்டர், எஸ்.பி. இருவரும் தலித்களாக இருந்தால் பிரச்னைகளில் ஒரு தலைப்பட்சமாக முடிவு எடுப்பீர்கள். அதனால்தான் அவரை மாற்றிவிட்டு தேவர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் அங்கு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார்’ என்று பதில் சொன்னார்கள். இது எனக்கு மட்டும் நடந்ததில்லை. தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் ஒரு தலித் கலெக்டராக இருக்கிறாரோ, அங்கு பெரும்பாலும் தேவர் இனத்தைச் சேர்ந்த ஒருவரைதான் எஸ்.பி.யாக நியமிப்பார்கள். தலித் ஒருவர் எஸ்.பி&யாக இருந்தால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒருவர் கலெக்டராக இருப்பார். வேறு எந்த சாதிகளுக்கும் இப்படிப் பார்க்கப்படுவது இல்லை.’’ என்றார்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்பான வேறொரு விழாவில் பேசிய உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., ‘‘நான் திருநெல்வேலியில் கலெக்டராக பணியாற்றியபோது அப்போதையை மாநில தேர்தல் அதிகாரி அங்கு வந்திருந்தார். அவரை வரவேற்று அழைத்துச் செல்லும்போது மிக நேரடியாக என்னிடம், ‘உமாசங்கர், நீங்க பிள்ளைவால்தானே?’ என்று எந்தக் கூச்சமும் இல்லாமல் கேட்டார். ‘இல்லை சார், நான் ஆதி திராவிடன்என்றதும் அவரது முகம் சுருங்கிப்போய்விட்டது’’ என்று கலெக்டரான பிறகும் தன்னை பின் தொடர்ந்த சாதியைப்பற்றிக் குறிப்பிட்டார்.

-------------------------------------------------------------
என் நண்பருக்கு வீடு பார்ப்பதற்காக சூளைமேட்டில் அலைந்தோம். புரோக்கர் ஒருவரும் கூடவே இருந்தார். அவர் காட்டிய ஒரு வீடு பிடித்துவிட்ட நிலையில் அட்வான்ஸ், வாடகை எல்லாம் பேசிவிட்டு வெளியே வந்துகொண்டிருக்கும்போது அந்த புரோக்கர் என் நண்பரிடம் ‘‘நீங்க என்ன ஆளுக சார்?’’ என்றார். நண்பர் கொஞ்சம் தயங்கினார். பிறகு சொன்னார். உடனே புரோக்கர் ‘‘கேட்டதுக்காக தப்பா நினைச்சுக்காதீங்க. இந்த எஸ்.சி. பயலுகல்லாம் காசை குடுத்துட்டு உள்ளே நுழைஞ்சுடுறானுங்க. அதுக்காகத்தான்...’’ என்றார். சொன்ன அந்த புரோக்கர் ஒரு முஸ்லீம்.
----------------------------------------------------------
நடிகர் சரத்குமார் ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’ தொடங்குவதற்கு மிக முன்பாக ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் என்னுடன் ஓரளவுக்கு தொடர்பில் இருந்தார். அப்போது நான் திருநெல்வேலியில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அவ்வப்போது அழைத்துப் பேசுவார். கட்சி தொடங்குவதற்கு முன்பு ஒரு வெள்ளோட்டமாக திருநெல்வேலிப் பகுதியின் சில இடங்களில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். ஏராளமான கார்களுடன் பெரிய கும்பல் திருநெல்வேலியில் இருந்து கிளம்பி ஆலங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. சுரண்டையில் இரவு பொதுக்கூட்டம். நெல்லையைப் பொருத்தவரை நிருபர்களும் சாதி வாரியாகப் பிரிந்து கிடப்பார்கள். நாடார் நிருபர்கள் ஒரு பக்கம், தேவர் நிருபர்கள் மறுபக்கம், பிள்ளைமார்கள் இந்தப் பக்கம் என்று வெளிப்படையாக இல்லாமல், ஒரு கூட்டு மனநிலை அவர்களை பிரித்து வைத்திருக்கும். உதிரிகள் ஏதோ ஒரு பக்கத்துடன் இணைத்துக்கொள்வார்கள். இந்த நிலையில்தான் சரத்குமாரின் வாகனம் முன் செல்ல, பின்னே ஏராளமான அவரது ரசிகர் மன்ற வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அதில் ஒரு காரில் பத்திரிக்கையாளர்கள் இருந்தார்கள்.

ஆலங்குளத்தில் கொடி ஏற்றிய சரத்குமாரின் கார் கிளம்பியது. அங்கு கூடியிருந்த மிகப்பெரிய கூட்டத்தைப்பற்றி என்னுடன் காரில் இருந்த சகப் பத்திரிகையாளர்கள் சிலர் சிலாகித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எந்த சாதியை சேர்ந்தவர்களாய் இருக்கக்கூடும் என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அப்போது திடீரென என் செல்போன் அடித்தது. எடுத்தால் ‘சரத்குமார் காலிங்’ என்று வந்தது. பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு நிருபர் இதைப் பார்த்துவிட அந்த காரில் இருந்த பெரும்பாலான நிருபர்களின் கவனம் என் மேல் திரும்பியது. அதில் ஒருவர், ‘ஏங்க, நிஜமாவே சரத்குமார்தான் பேசுறாரா? நீங்க ஸ்பீக்கர்ல போடுங்க’ என்றார். அந்த ஆசையை நிறைவேற்றும் பொருட்டு ஸ்பீக்கர் போனில் பேசினேன். எதிர்முனையில் பேசிய சரத்குமார், ‘கூட்டம் எப்படி இருந்தது? ஏற்பாடு எப்படி?’ என்பது மாதிரி வழக்கமாகத்தான் விசாரித்தார். ஆனால் என்னுடன் பயணித்த சக பத்திரிகையாளர்களுக்கு, அன்று முதல் நான் நாடாராகிப்போனேன். அதுவும் அவர்கள் கணக்கில் ‘சரத்குமாரே போன் போட்டுப் பேசும் ஆள்’ என்பதால் திருநெல்வேலியை விட்டுவிட்டு வெளியேறும் வரை அந்த சிலரிடம் எனக்கான மரியாதை இருந்துகொண்டே இருந்தது.
----------------------------------------------------------
தீபாவளிக்கு ஊருக்குப் போயிருந்தபோது என் அம்மாவுக்கு சேலை எடுத்துக்கொண்டுப் போயிருந்தேன். சேலை டிஸைன் எல்லாம் அம்மாவுக்குப் பிடித்திருந்தது. கலர் மட்டும் பிடிக்கவில்லை. அதை சொல்வதற்கு என் அம்மா சொன்ன வார்த்தை, ‘‘என்னடா கலர் இது... பறையோட்டு கலர் மாதிரி கண்றாவியா இருக்கு’’. அந்த சேலையின் நிறம் நீலம்.
---------------------------------------------------------------
சில மாதங்களுக்கு முன்பு நண்பர்கள் நான்கைந்து பேர் இயக்குநர் பாரதிராஜாவை சந்திக்கப் போயிருந்தோம். வரவேற்பறையில் பாரதி ராஜா வாங்கிய விருதுகள் வைக்கப்பட்டிருந்தன. அவர் எத்தனையோ கணக்கில்லா விருதுகள் வாங்கியவர். ஆனால் அவர் தன் அலுவலக வரவேற்பறையில் வைத்திருந்தது இரண்டு ஷீல்டுகள்தான். ஒன்று நினைவில் இல்லை. இன்னொன்று மும்பைவாழ் முக்குலத்தோர் சங்கத்தினர் கொடுத்தது.
-----------------------------------------------------------
விருதுநகர் மாவட்டத்தில் ஏழாயிரம் பண்ணை என்றொரு ஊர் இருக்கிறது. கோவில்பட்டிக்கு அருகில் இருக்கும் இந்த ஊரில் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் பள்ளி மாணவன் ஒருவன் ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டான். நான் பணியாற்றும் பத்திரிகைக்கு இந்த செய்தியை சேகரிப்பதற்காகப் போயிருந்தேன். அந்த மாணவனின் வகுப்பில் அவனுடன் படிக்கும் இன்னொரு பையனிடம் பேசிக்கொண்டிருந்தபோது அந்த 14 வயது பையன் சொன்னான், ‘‘அவனும் நாடாக்கமாரு, அந்த வாத்தியாரும் நாடாக்கமாரு. அப்படி இருந்தும் குத்திப்புட்டாண்ணே..’’. ‘சொந்த சாதியில் குத்திக்கொல்லக்கூடாது, வேறு சாதியாக இருந்தால் குத்தலாம்’ என்பது அவன் மண்டைக்குள் ஏற்றப்பட்டிருக்கும் நம்பிக்கை.
---------------------------------------------------------------
நேற்றிரவு மேற்கு மாம்பலத்தில் நண்பனின் அறைத்தோழன் கேட்டான், ‘‘இப்பல்லாம் யாருங்க சாதிப் பாக்குறா? சும்மா அதையேப் பேசிக்கிட்டுருக்காதீங்க’’
------------------------------------------------